Press "Enter" to skip to content

தமிழக மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகை:

நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »