Press "Enter" to skip to content

ஏர்டெல்லை தொடர்ந்து நாளை முதல் மற்றொரு கைபேசி சேவை கட்டணமும் உயருகிறது

உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் கைபேசி சேவைக்கு குறைவாக செலவிடுவதாக ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறியுள்ளார்.

பார்தி ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் அதன் ‘பிரீ பெய்டு’ சேவைக்கான கைபேசி கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு வருகிற 26-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 28 நாட்கள் கொண்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.79 ஆக உள்ளது. அது ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.149 கட்டணம் ரூ.179 ஆகவும், ரூ.219 கட்டணம் ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 வருடத்துக்கான கட்டணம் ரு.2,399-ல் இருந்து ரூ.2,899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 20 முதல் 25 சதவீதம் வரை கட்டண அறிவிப்பை வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகரித்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களில் 20 சதவீதம் முதல் 23 சதவீதம் என்ற அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக வோடபோன் ஐடியா தலைமை அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், “கைபேசி சேவை உயிர்ப்புடன் இருக்க கட்டண உயர்வு அவசியம்” என்றார்.

ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறுகையில், “உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் கைபேசி சேவைக்கு குறைவாக செலவிடுகிறார்கள். சில மேற்கத்திய நாடுகளில் கைபேசி சேவைக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.

இந்தியாவில் இந்த தொகை ரூ.200 முதல் ரூ.300 வரையாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 200 ரூபாய்க்கு கீழ் மாதாந்திர கட்டணம் வைத்திருந்தால் யாரும் இந்த துறையில் நீடிக்க முடியாது என்றார்.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘கிரிசில்’ கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்புள்ள 5ஜி ஏலத்தில் அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க கைபேசி நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதன் காரணமாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »