Press "Enter" to skip to content

மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல் ஏற்படுத்திய காயம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இன்றும் ஆறாத வடுவாகவே உள்ளது.

மும்பை:

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அந்த நாளில்தான், நிதி தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை அழித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சதி செய்து பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.

அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை குருஷேத்திர போர்க்களம் போல ஆனது.

இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளை எல்லாம் உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு காவல் துறை படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் காவல் துறை கமிஷனர் அசோக் காம்தே, எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர்.

அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அவன்மீது முறைப்படி வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் 2012-ம் ஆண்டு புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.

மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தாக்குதலால் ஏற்பட்ட துயர வடுக்கள், மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக் கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »