Press "Enter" to skip to content

சபரிமலையில் அய்யப்பனை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் கணினிமய முன்பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி வழங்கப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வருகை தந்தனர்.

சபரிமலை:

கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடந்த வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணி முதல் 11 மணி வரை ஏராளமான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

சபரிமலையில் தற்போது கணினிமய முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுவதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வந்தனர்.

2 ஆண்டுக்கு பின்னர் நேற்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 35 கி.மீ. தூரமுள்ள இந்த வனப்பாதையில் 12 இடங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »