Press "Enter" to skip to content

மு.க. ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்து சேவை, அரசு விரைவு பேருந்துகளின் சேவையை தடை செய்வது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். அதேபோல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது, உதவூர்தி வாகனங்களை அதிகரித்தல், ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாகவும் முதல்- அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்து சேவை, அரசு விரைவு பேருந்துகளின் சேவையை தடை செய்வது, ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துவது, சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது, கடற்கரையில் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து அரசின் சார்பில் நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »