Press "Enter" to skip to content

கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடியது நீங்கள்- அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

அ.தி.மு.க.வின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு எழவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை:

பொங்கலையொட்டி தமிழக அரசு வழங்கி வரும் பரிசுத்தொகுப்பு தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறும்போது, பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமாக இல்லை என்று கூறி இருந்தனர்.

இந்தநிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக அ.தி.மு.க. கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தி.மு.க. என்பது பெரிய ஆலமரம். ஆனால் அ.தி.மு.க. என்பது ஒரு காந்தாரி மடமாகத்தான் இருக்கிறது. தி.மு.க. சின்னமே உதய சூரியன். தி.மு.க.வின் திட்டங்கள் கோடி சூரியன் ஆகும்.

அதற்கு பிற இடங்களில் இருந்து வெளிச்சம் பெறத்தேவை இல்லை. அதன் ஒளி வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்கே தேவைப்படும்.

தி.மு.க. அரசின் திட்டங்களுக்கோ, தி.மு.க.வுக்கோ எந்த விளம்பர வெளிச்சங்களோ தேவை இல்லை. எனவே விதைக்கிற நேரத்தில் வெளியூருக்கு போய்விட்டு அறுக்கிற நேரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதுபோல அ.தி.மு.க. செயல்பட வேண்டாம்.

அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடினார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரம் அ.தி.மு.க.வில்தான் தோன்றியது.

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களில் அவர்கள் ஆட்சியில் அ.தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டியபோது ஓ.பன்னீர் செல்வம் அமைதியாகத்தான் இருந்தார். புதிய சட்டசபையை ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதும் அவர்கள்தான்.

அ.தி.மு.க.வின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு எழவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துவிட்டு அதனை செயல்படுத்தும் வழிகளை மேற்கொள்ளவில்லை.

பிள்ளைக்கு பெயர் வைத்தீர்களே, சோறு வைத்தீர்களா? எனவே தி.மு.க.வின் திட்டங்களை குறைசொல்ல அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »