Press "Enter" to skip to content

சென்னையில் சாலை அமைக்கும் பணி – இரவு நேரத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில், மழையின் காரணமாக சேதமடைந்த வாரன் சாலை மற்றும் மகாலிங்கம் சாலைகளை புதிய சாலைகளாக அமைக்கும் பணிகளை இரவு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்து புதிய சாலைகள் அமைக்கவும்,பணிகளை விரைவாக தொடங்கிடவும், பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சாலையின் தரம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும்

பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்புப் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், முதலமைச்சர் நேற்று இரவு தேனாம்பேட்டை மண்டலம், வாரன் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகழ்ந்தெடுக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கம் சாலையில் தார்க்கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் போது தாரின் வெப்பநிலை சரியான அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அரசு முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரகுமான், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »