Press "Enter" to skip to content

பாலியல் வழக்கில் இருந்து கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு – கன்னியாஸ்திரிகள் முடிவு

எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுப்போம், எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்று கேரள கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றிய போது 13 முறை தம்மை வற்புறுத்தி பாதிரியார் பிரான்கோ மூலக்கல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தமது புகாரில் அந்த கன்னியாஸ்திரி தெரிவித்திருந்தார். 

அவரை கைது செய்யக்கோரி ஜலந்தர் மறை மாவட்ட கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.  இதையடுத்து 2018ல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பாதிரியார் மூலக்கலை கைது செய்தனர். அதன்பின் பாதிரியார் மூல்லக்கல் ஜாமினில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி பாதிரியார்  பிராங்கோ மூலக்கலை விடுதலை செய்து உத்தரவிட்டது. தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பாதிரியார், இறைவனை துதி என்று ஒரு வரியில் பதில் அளித்தார் .  

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த கன்னியாஸ்திரிகள் தீர்ப்பை நம்பமுடியவில்லை என்று தெரிவித்தனர். பாதிரியார் மீது  காவல்துறை வழக்குத் தொடர்ந்து நீதியைக் காட்டினாலும், நீதித்துறையிலிருந்து எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்று கன்னியாஸ்திரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிரியார் மூலக்கல் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »