Press "Enter" to skip to content

மொழிப்போர் தியாகிகளுக்கு இணைய வழியில் இன்று முதல் வீர வணக்க நாள் கூட்டங்கள்- திருமாவளவன் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25 அன்று கடைபிடித்து வருகிறோம். இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வை அதன்மூலம் பாதுகாத்து வருகிறோம்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1937 முதல் 1940 வரை சுமார் 3 ஆண்டுகள் மொழிப்போர் நடைபெற்றது.

பள்ளிகளில் இந்தி கட்டாயம் என ராஜாஜி தலைமையிலான அரசு அறிவித்ததையடுத்து ‘சென்னை மாநிலத் தமிழர் மாநாடு’ 26.12.1937 அன்று திருச்சியில் கூடி ‘ இந்தி வேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் ராஜாஜியின் தலைமையிலான அரசு இந்தித் திணிப்புக்கான அறிவிப்பை 1938 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் நாள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. செப்டம்பர் 26-ம் நாள் அறிஞர் அண்ணாவும், டிசம்பர் 5-ம் நாளன்று தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தை பெரியார் கைது செய்யப்பட்ட அதே நாளில் சென்னை சவுகார்பேட்டையில் நடந்த மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டார் ராயபுரத்தைச் சார்ந்த நடராசன்.

அவருக்கு ஏழரை மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்தபோது கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் 30ஆம் தேதி அவர் சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. 1939 ஜனவரி 15-ந் தேதி அவர் உயிர் நீத்தார்.

மொழிப்போரில் ஈடுபட்டு ஒரு கைதியாக இருந்த நிலையில் முதல் களப்பலியாக நடராசன் வீர மரணமடைந்தார்.

அவர் இயற்கையாக மரணமடைந்ததாகத் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. 18.1.1939 இல் மொழிப் போராளி நடராசனின் மரணம் குறித்து விளக்கமளித்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜாஜி “நடராசன் படிப்பறிவு இல்லாதவர். அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப் போலப் படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” எனக் கூறினார். ராஜாஜியின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் எழுந்தது. நடராசனின் தந்தையார் ராஜாஜியின் கூற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

நடராசனை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு “மறியலில் ஈடுபட்டதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம்“ என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் “கோழையாக வாழ்வதைவிட வீரனாகச் சாவதையே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார். அப்படியே வீர மரணமும் எய்திவிட்டார்.

நடராசன் உயிரிழந்து சுமார் ஒரு மாதம் கழித்து 13.02.1939 அன்று மொழிப் போராளி தாளமுத்து கைது செய்யப்பட்டார். 12.03.1939 அன்று தஞ்சை சிறையில் அவர் கைதியாகவே உயிரிழந்தார். இன்னும் தமிழ் காக்கும் அறப்போரில் இவர் இரண்டாவதாகக் களப்பலியானார்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயம் என 1948-ல் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்துப் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். அன்றைய கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் தனது பதவியைவிட்டு விலகும் நிலையை அந்தப் போராட்டம் ஏற்படுத்தியது. 10.07.1948 இல் ஆரம்பித்த அந்தப் போராட்டம் 18.07.1950 அன்று, ’இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடம்தான்’ என அறிவிக்கும்வரை தொடர்ந்தது. இந்த அறப்போர் தமிழர் வரலாற்றில் இரண்டாவது மொழிப்போராகும்.

பக்தவத்சலம் முதல்-அமச்சராக இருந்தபோது இந்தியை அலுவல் மொழி ஆக்கும் சட்டத்தை நடைமுறைப் படுத்த முனைந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1964 ஜனவரி 25-ம் நாளன்று கீழப்பழுவூர் சின்னசாமி தீக்குளித்து உயிரிழந்தார். அதன்பின்னர் நடந்த மூன்றாவது மொழிப்போர்.

1965 ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரையில் நடைபெற்றது. இம்மொழிப்போரில் எழுபது பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதில் ஆறு பேர் தீக்குளித்து இறந்தனர். இரண்டு பேர் நஞ்சு அருந்தி உயிர் நீத்தனர்.

இப்படி மூன்று கட்டமாக நடைபெற்ற மொழிப்போராட்டங்களில் உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25 ஆம் நாளை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம்.

இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன், இவ்வாண்டுமுதல் முதல் களப்பலியான நடராசனின் வீரவணக்க நாளான ஜனவரி 15 முதல் சின்னசாமி தீக்குளித்த ஜனவரி 25 வரை இணைய வழியில் பல்வேறு தலைப்புகளில் நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

ஜனவரி 15,18,20,23 மற்றும் 25 ஆகிய ஐந்து நாட்களில் மாலை 6 முதல் இரவு 8 வரை இந்த இணையவழிக் கூட்டங்கள் நடைபெறும்.

ஜனவரி 15 ஆம் நாள் மொழிப்போரின் முதல் தியாகிகள் நடராசனின் நினைவேந்தலாகவும்; 18 ஆம் நாள் ‘ வழக்காடு மொழியாகத் தமிழ் ‘ என்னும் தலைப்பிலும், 20-ம் நாள் ‘ பயிற்று மொழியாகத் தமிழ் “ என்னும் தலைப்பிலும்; 23-ம் நாள் ‘ ஆட்சி மொழியாகத் தமிழ்’ என்னும் பொருளிலும்; 25 -ம் நாள் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் எனவும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் பொதுமக்களுக்கு தடை

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »