Press "Enter" to skip to content

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்- மாடு முட்டி 2 இளைஞர்கள் பலி

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பெரியசூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அலங்காநல்லூர்:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. பொங்கல் திருநாள் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ஏராமானோர் திரள்வதுண்டு.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்தது பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முடிந்த நிலையில் இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க கணினிமய மூலம் பதிவு செய்த தகுதியான 700 காளைகள் திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பார வண்டி, வேன்களில் கொண்டுவரப்பட்டன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டை காண மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

காலை 8 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல்படி போட்டி தொடங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

முதலில் வாடிவாசல் வழியாக 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் பிடிக்கவில்லை.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்த 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் இறக்கப்பட்டனர். ஒரு சுற்றுக்கு 30 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்த சீறி வந்த காளைகளை மடக்கி பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை நோக்கி பாய்ந்தாலும் ஒருவர் பிடித்தால் மற்றவர் விலகி கொண்டு அடுத்த காளையை பிடிக்க பாய்ந்தனர்.

சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது.

காளைகளை பிடித்த வீரர்களுக்கும், காளையர்களை பந்தாடி விட்டு பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, டி.வி., மிதிவண்டிகள், சேர்கள், பித்தளை பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்று அதிக காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தேர் மற்றும் 2-ம் பரிசு பெறும் வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பில் மோட்டார் மிதிவண்டி உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

சிறந்த காளை உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 1,827 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி பெரியசூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக மொத்தம் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் குறைந்தபட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்கின. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத் துறையினரின் ஆய்விற்கு பிறகு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கெட்ட சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முதன்முதலாக கோவில் அம்மன் முனியாண்டவர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது.

இதற்கிடையே 112 எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 29) வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த காளை உரிமையாளரான மீனாட்சி சுந்தரத்தை மார்பில் முட்டியது. இதில் குடல் சரிந்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 108 உதவூர்தி மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அதிக ரத்தம் சென்றதால் பரிதாபமாக இறந்தார்.

அவனியாபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர், பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் போட்டியை வேடிக்கை பார்த்த பாலமுருகன் (வயது 18) என்பவர் மாடு முட்டி பலியானார். காயம் அடைந்தவர்களில் 21 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »