Press "Enter" to skip to content

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு- 156.76 கோடி டோஸ் செலுத்தி சாதனை

தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டது. 

பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த துவங்கினர். இதன் காரணமாக தடுப்பூசி இயக்கம் பெரும் வெற்றி அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 7ம் தேதி 150 கோடி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை எட்டியது.

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 68 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இதுவரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »