Press "Enter" to skip to content

குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மறுபரிசீலனை செய்து மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா:

தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதனால், அதிருப்தி அடைந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது :

இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது. 

நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்திக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு தமது கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். 

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது நான்காவது தடவையாகும். இதற்கு முன்னர் 2015, 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற  குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »