Press "Enter" to skip to content

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 21 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் கார்த்திக்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.

அலங்காநல்லூர்:

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இப்போட்டி நடத்தப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன. இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காளைகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் பின்வாங்கினர். அதே நேரத்தில் பல காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் மடக்கி பரிசுகளை வென்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதி பெற்ற 300 மாடுபிடி வீரர்களும் ஒவ்வொரு சுற்றாக 50 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 8 சுற்றுகளாக 2020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 365 வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியின் நிறைவில் சிறந்த காளையாக புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தேர் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பாக தேர் பரிசாக வழங்கப்பட்டது. 

அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் 19 காளைகளை பிடித்து 2ம் பரிசு பெற்றார். சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் 13 மாடுகளை அடக்கி மூன்றாவது பரிசு பெற்றார். 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடித்தவர்களுக்கு மோட்டார் மிதிவண்டி பரிசாக வழங்கப்பட்டது.

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. காளைகளை அடக்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »