Press "Enter" to skip to content

4 நாட்கள் தொடர் விடுமுறை- சென்னையில் இருந்து 3 ஆயிரம் பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

கோயம்பேட்டியில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை:

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி போன்ற சிறப்பு தினங்களையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பஸ், தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வழக்கமான தொடர் வண்டிகள் மட்டுமின்றி சிறப்பு தொடர் வண்டிகளும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களை நாடி சென்றனர். தொடர் விடுமுறை கூட்டத்தை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோயம்பேட்டியில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வெயிலின் தாக்கம் காரணமாக மதியம் வரை கோயம்பேடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்தனர்.

இரவு 7, 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் நிரம்பி காணப்பட்டது. கூட்டம் வர வர அவர்களை சிறப்பு பேருந்துகள் மூலம் போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் நிரம்பின.

விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 900 சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நள்ளிரவு 1 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி செல்லக்கூடிய பயணிகள் அதிகமாக இருந்ததால் அங்கு அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டார். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து நடத்திய சோதனையில் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

700-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. கூட்டத்தை பார்த்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பவும் 17-ந்தேதி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுதவிர 16-ந்தேதி (சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியாகும். அதனால் திருவண்ணாமலைக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது.

சென்னை, ஆரணி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »