Press "Enter" to skip to content

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் பலி

தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அக்கி ரெட்டி கூடேம் என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 4-வது யூனிட்டில் 18 பேர் நேற்று இரவு வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் தொழிற்சாலை யூனிட்டில் இருந்து நைட்ரிக் ஆசிட் திடீரென கசிந்து தீ பிடித்தது. பற்றி எரிந்த தீ வேகமாக பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியே தப்பி ஓட முயற்சி செய்தனர்.

 அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் 4-வது யூனிட் முழுவதும் மேலும் தீ பரவி பற்றி எரிந்தது.

தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் அலறி கூச்சலிட்டனர். அதற்குள் 4 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தீ விபத்து குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஏலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 14 தொழிலாளர்களை மீட்டு விஜயவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.

விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 12 பேர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி டீன் தெரிவித்தார். இதனால் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தொழிற்சாலை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்:-

இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டது. தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. இன்று மாலை நடைபெறும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் 4 கட்சிகள்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »