Press "Enter" to skip to content

பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது அவசியம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு கூறவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின் பற்றுவதும் அவசியமாகும் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

ஆனால் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

டெல்லியில் குருகிராம், நொய்டா பகுதிகளில் தற்போது தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பதட்டமோ அச்சமோ படத்தேவையில்லை. தமிழகத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மருத்துவ கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

கொரோனா பாதிப்பு நோயாளிகளை நம்மிடம் உள்ள மருத்துவ வசதிகள் மூலம் பாதுகாக்க முடியும். அதேநேரத்தில் தடுப்பூசி தான் நிலையான பாதுகாப்பாகும். அதனால் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவில்லை. மரபணு மாற்றம் மூலம் உருமாறி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் முழுமையான எதிர்ப்பு சக்தியுடன் போராட முடியும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து விட்டது என்று அவசரபடாமல் சுகாதாரத்துறை வல்லுனர்கள் கூறும் கருத்துக்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்கள், திருமணம் உள்ளிட்ட விசே‌ஷ கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது கட்டாயம் முககவசம் அணிவது நல்லது. ஆனால் தற்போது மக்கள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது கவலை அளிக்கிறது.

நாம் 3 கொரோனா அலைகளை சந்தித்து இருக்கிறோம். கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவாமல் மாற்றம் பெற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 1.37 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமலும், 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமலும் உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி இருந்தும் போடாமல் உள்ளனர். தயவு செய்து தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டதன் மூலம் தான் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும் உயிர் இழப்பு ஏற்படவில்லை.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு வசதி உள்ளது. இவ்வளவு வசதி இருந்தும் தடுப்பூசி போடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மற்ற நாட்களில் 25 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு கூறவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின் பற்றுவதும் அவசியமாகும்.

தமிழகத்தில் எக்ஸ்இ தொற்று பாதிப்பு இல்லை என்றாலும் மார்ச் மாதத்தில் ஒமைக்ரான் உருமாறிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்டது. 93 சதவீத மக்களுக்கு ஒமைக்ரான் உள்வகை (பி.ஏ.2) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அலட்சி யமாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »