Press "Enter" to skip to content

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் ரவி முடிவு- மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா?

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அந்த குழு அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவுக்கு பா.ஜனதா தவிர்த்து மற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். ஆனாலும் மசோதா தொடர்பாக எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகையில் இருந்து முதலில் வெளியாகவில்லை.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வியாளர் பிரின்ஸ் விளக்கம் கேட்டபோது, “மசோதா மீது ஆளுநர் ஆய்வு செய்து விரைவில் முடிவை எடுப்பார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாமல் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை பிப்ரவரி 2-ந்தேதி செய்தி குறிப்பு வெளியிட்டது. அதில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய சட்டமுன்வடிவு எண்.43/2021 யையும், இந்த சட்டமுன்வடிவுக்கு அடிப்படையாக இது தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையையும், விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவ சேர்க்கையில், நீட் தேர்வுக்கு முந்தைய சமூக நீதி நிலைமையில் குறிப்பாக சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நிலையை ஆய்வு செய்த பின்னர், இந்த சட்டமுன்வடிவு, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் கருதுவதாகவும், அதனால் அவையின் மறுபரிசீலனைக்காக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சமூகநீதியை முன்னெடுத்து செல்ல, நீட் தேர்வின் தேவையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது அப்போது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 5-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சட்டசபை சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து விவாதித்து, சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பிப்ரவரி 8-ந்தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதா மீது ஆளுநர் கையெழுத்து போடவில்லை.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால் கடந்த மார்ச் 15-ந்தேதி கவர்னரை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார். அப்போது மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக முதல்-அமைச்சரிடம் ஆளுநர் உறுதி அளித்தார்.

ஆனால் அதன்பிறகும் மசோதாவை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பவில்லை. கடந்த 31-ந்தேதி முதல்-அமைச்சர் டெல்லி சென்றிருந்தபோதும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடம் நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை சுட்டிக்காட்டி ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க அழுத்தம் தருமாறு கேட்டுக்கொண்டார்.

இத்தனைக்கு பிறகும் கூட 208 நாட்கள் கடந்து விட்ட நிலையில் நீட் விலக்கு சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தமிழ்புத்தாண்டையொட்டி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு. மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் மாளிகை சென்று அவரை சந்தித்து பேசினார்கள்.

ஆனால் அப்போது மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவது குறித்து எந்த உத்தரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை. அது பரிசீலனையில் இருக்கிறது என்று மட்டும் கூறி இருந்தார்.

இதனால் தமிழ்புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.

தி.மு.க. கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்றனர்.

கவர்னரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தொடர் அழுத்தம் காரணமாக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பினாலும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்குமா? என்பது அதன் பிறகுதான் தெரியவரும்.

ஆளுநர் இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்ப முடியாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அமைச்சகத்துக்குதான் அந்த மசோதா சென்றடையும். மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »