Press "Enter" to skip to content

வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து… டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மலைப்பகுதியில் வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் மீது விலங்குகள் மிதிக்கும்போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

சென்னை:

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துளள்து.

வனப்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் மற்றும் மதுக்குவளைகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ் குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்துவோர், கண்ணாடி பாட்டில்களை மலைப்பகுதியில் வீசிச் செல்வதால், அவற்றின் மீது விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.  எனவே, கண்ணாடி பாட்டில்களுக்குப் பதில், வேறு மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

கண்ணாடி பாட்டில்களை விற்கப்படும்போது அவற்றை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஏப்ரல் 25ம் தேதிக்குள் திட்டத்தை தாக்கல் செய்யும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

அந்த திட்டத்தில் திருப்தி அடைந்தால் தொடர்ந்து மலைவாசஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளிப்பதாகவும், இல்லாவிட்டால் மலைவாசஸ்தலங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »