Press "Enter" to skip to content

5 மாதத்தில் காலாவதியாகும் 1.28 கோடி தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அடுத்தகட்ட நடவடிக்கை

தமிழகத்தில் தற்போது 1.38 கோடி தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் காலாவதியாகிவிடும். அதற்குள் தடுப்பூசி அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரமாக செயல்படுத்தியதால் 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டனர். மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களை தடுப்பூசி போட வைத்தனர்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் பொதுமக்கள் மத்தியிலும் கொரோனாவை பற்றிய அச்சமும் விலகிவிட்டது.

இதனால் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய கணக்குபடி 54.71 லட்சம் பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை.

அதேநேரம் 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் என்ற விகிதத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் 1.38 கோடி தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் காலாவதியாகிவிடும். அதற்குள் தடுப்பூசி அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அல்லது தேவைப்படும் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் கூறும்போது, ‘ஊசி மருந்தை வீணாகாமல் தவிர்க்க பொதுமக்களை பெருமளவில் வரவழைத்து ஊசி போடுவதுதான் சரியாக இருக்கும். மருந்துகள் வீணாகிவிடுமே என்ற கவலை இருந்தாலும், இது 1.2 கோடி மக்களின் உயிர் சம்பந்தமான பிரச்சினை என்பதுதான் வேதனை அளிக்கிறது’ என்றார்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

1.28 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அதேநேரம் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 1.75 கோடி பேர். இவர்கள் ஊசி போட்டால் வீணாகாது. மெகா முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்ததால்தான் மருந்து தேங்கி உள்ளது.

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஒரேவழி தடுப்பூசிதான். ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அதேபோல் ஒரு நிலைமை வராமல் இருக்க பொதுமக்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவரையும் ஊசி போட வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும் போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம். எனவே மருந்துகள் வீணாக வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »