Press "Enter" to skip to content

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல் – இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராகிறார்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.

பாரீஸ்:

பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளேன் என அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்தார்.

புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்த தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. 4.90 கோடி வாக்காளர்களுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார்.

இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »