Press "Enter" to skip to content

துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று நிறைவேறியது

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை கவர்னரே நியமித்து வரும் நிலையில் அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பி வைக்க உள்ளது.

சென்னை:

சட்டசபையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம் மற்றும் 1991-ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணைவேந்தரானவர் 2000-ம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழக சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்கப்படுதல் வேண்டும்.

மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு மாநில அரசானது மாநில அரசுக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வேண்டும் என கருதுகிறது.

அந்த நோக்கத்துக்காக கீழ்க்கண்ட பல்கலைக்கழக சட்டங்களை திருத்த முடிவு செய்துள்ளது.

1. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

2. அண்ணா பல்கலைக்கழகம்.

3. பாரதியார் பல்கலைக்கழகம்.

4. பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

5. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

6. அழகப்பா பல்கலைக்கழகம்.

7. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

8. பெரியார் பல்கலைக்கழகம்.

9. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்.

10. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

11. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம்.

12. அண்ணாமலை பல்கலைக்கழகம்.

13. சென்னை பல்கலைக்கழகம்.

மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்துவதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

பா.ஜனதா எம்.எல்ஏ. நயினார் நாகேந்திரன் கூறுகையில், “ஆரம்ப நிலையிலேயே இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்” என்றார். இதைத் தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சட்டமசோதா இன்றே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் மசோதா மீது கருத்து தெரிவித்தனர்.

முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதன்பின் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து பேசினார்கள்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சின்னப்பா (ம.தி.மு.க.), ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஜி.கே.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் ஆதரித்து பேசினார்கள்.

அதன் பிறகு இறுதியாக அமைச்சர் பொன்முடி மசோதா மீது விளக்கம் அளித்து பேசினார். இதைத் தொடர்ந்து சட்ட மசோதா நிறைவேறியது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை கவர்னரே நியமித்து வரும் நிலையில் அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பி வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »