Press "Enter" to skip to content

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் கட்டப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசினார்.

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே பரபரப்பாக இருந்ததாகவும் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உள்பட பலர் சென்று ஆறுதல் கூறியதாக பட்டியலிட்டு பேசினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இதையெல்லாம் இங்கு பதிவு செய்ய வேண்டுமா? யார் யாரெல்லாம் சென்று உதவி செய்தார்கள் என்று கூற வேண்டுமா? என்றார்.

உடனே எடப்பாடி பழனிசாமி, “பேரவை தலைவர் இப்படி குறுக்கிட்டால் நாங்கள் பேசுவதை எப்படி பதிவு செய்வது.

இன்று கூட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் நடந்த தீ விபத்து தொடர்பாக அங்கு செய்த உதவிகளை எடுத்து பேசினார்.

இவ்வாறு அவர் கூறிவிட்டு நேற்று செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. அ.தி.மு.க. ஆட்சி பற்றி கூறிய சில விஷயங்களையும் குறிப்பிட்டார். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மகாமகம் சம்பவத்தை ஒப்பிட்டு பேசுகிறார். இவர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார். 2006ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியால் எம்.எல்.ஏ. ஆனார். எனவே அதையெல்லாம் நாங்கள் பேசலாமா? எனவே இப்படி பேச அனுமதித்தால் அது முன்னுதாரணமாகி விடும். அவர் நேற்று அவதூறு செய்தியை பதிவு செய்துள்ளார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.

அப்போது அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு, “2005ம் ஆண்டு சட்டசபையில் அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி கலைஞரை புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டினார். அந்த கால கட்டத்தில் கருணாநிதியை கைது செய்தபோது அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், பா.வளர்மதி ஆகியோர் என்னென்ன பேசினார்கள் என்பதையும் அவைக்குறிப்பு புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டி பேசினார்.

இதே போல் 2011ம் ஆண்டு சி.விஜயபாஸ்கர் பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டு அவ்வாறு அவர் பேசிய மறுநாளே அமைச்சரானதையும் சுட்டிக்காட்டினார். இதே போல் 2012ம் ஆண்டு பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதையும் சுட்டிக்காட்டினார்.

கலைஞரை தள்ளுவண்டி தாத்தா என்றும் கிழிந்த ஜிப்பாவுடன் வந்தவர் என்றும் விமர்சித்தது இந்த அவைக்குறிப்பில் உள்ளது. தமிழகம் போற்றும் தலைவரை அப்படி பேசலாமா?

கடந்த 2013ம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சராக இருந்த ஆர்.காமராஜ் பேசும்போது தள்ளுவண்டியும் தண்ணி வண்டியும் கூட்டு வைக்கப் போகிறார்களாம் என்று விமர்சித்துள்ளார். இதையெல்லாம் நாங்கள் அவைக்குறிப்பில் இருந்து அன்றைக்கு நீக்க சொன்னோம். ஆனால் அவர்கள் அதையெல்லாம் நீக்கவில்லை. இப்போது செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. மகாமகம் சம்பவம் தொடர்பாக பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறார்கள்.

அவர் சட்டசபையில் பதிவான விஷயத்தைதான் எடுத்து சொல்லி இருக்கிறார். எனவே இதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய தேவையில்லை.

இதைத்தொடர்ந்து சபாநாயகரும் இந்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றார்.

இதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது:

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 105 வருட பழமையான கட்டிடத்தில் நரம்பியல் துறை இயங்கி வருகிறது. தரை தளத்தில் சர்ஜிக்கல், முதல் தளத்தில் நரம்பியல் சம்பந்தப்பட்டவை. 2ம் தளத்தில் மற்ற நோயாளிகள் உள்ளனர்.

இதன் பக்கத்து கட்டிடத்தில் 128 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலை 10.21 மணிக்கு தீப்பிடித்த தகவல் அறிந்ததும் தஞ்சைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லி மீட்பு பணிகளை வேகப்படுத்த சொன்னார்.

உடனே நாங்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினோம். தீப்பிடித்த 10 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வண்டிகள் வந்து பணியை தொடங்கி விட்டனர்.

அங்கிருந்த நோயாளிகளை துரிதமாக மீட்டோம். செய்தி சேகரிக்க வந்த ஊடகத்துறையினரும் மீட்பு பணியில் இறங்கினார்கள். ஆனால் தீயெல்லாம் அணைந்து 3 மணி நேரம் கழித்து அ.தி.மு.க.வினர் சாப்பாடு வழங்கி உள்ளனர். இதை இங்கு எதிர்க்கட்சி தலைவர் எடுத்து சொல்கிறார்.

இந்த விஷயத்தில் அரசு மிக தீவிரமாக செயல்பட்டது. வேறு முதல்-அமைச்சர் ஆட்சியாக இருந்திருந்தால் 128 நோயாளிகளும் பலியாகி இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் தளபதி முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடங்களை கலைஞர்தான் கட்டினார். நீங்கள் (அ.தி.மு.க.) வெள்ளை அடித்து திறந்து வைத்திருக்கிறீர்கள். அந்த கட்டிடத்தை நீங்கள் கட்டியதாக கூறுவது அபத்தம்.

அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி என்று பெயர் சூட்டியதும் நாங்கள். தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டிடம் 105 வருட பழைய கட்டிடமாகும். 10 வருடமாக ஆட்சியில் இருந்த நீங்கள் சரிவர பராமரிக்காததே இந்த தீ விபத்துக்கு காரணமாகும்.

இப்போது அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு திட்டமதிப்பீடு தயார் செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »