Press "Enter" to skip to content

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசு அனுமதி கோரி சட்டசபையில் தீர்மானம்

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சென்னை:

இலங்கை நாட்டில் தவறான கொள்கை முடிவின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து விட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது.

அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கல்லெண்ணெய் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது.

இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் கல்லெண்ணெய், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பொடி உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

ஆனாலும் இலங்கை அரசு பதவி விலகாமல் போராட்டக்காரர்களை சமாளித்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. கல்லெண்ணெய், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்த அந்த தீர்மானம் வருமாறு:

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »