Press "Enter" to skip to content

ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு- குறைகளை கேட்டறிந்தார்

உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்திலும் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார்.

உசிலம்பட்டி:

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை சென்றார். 

விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி நோக்கி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர்,  செல்லும் வழியில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கிருந்த ஊழியரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  தீ விபத்து மற்றும் பிற விபத்து குறித்த பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அவர், அங்கு வசிப்பவர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், குறைகளை கேட்டறிந்தார்.  

பின்னர் இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பையும், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றும், இந்த ஆய்வுகளில் பெறப்பட்டுள்ள உள்ளீடுகள் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கையில் எதிரொலிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின் போது தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு  உடனிருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »