Press "Enter" to skip to content

இமாச்சல் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பேட்டி

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங், தமது மாநிலத்தில், பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க  உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

முஸ்லிம் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று அசாம் முதலமைச்சர்  ஹிமந்த பிஸ்வா சர்மா  வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக காங்க்ரா மாவட்டத்திற்கு சென்ற அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். நாங்கள் விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இருந்து இமாச்சல் நிலைமை வேறுபட்டது என்றும், இந்த சட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்காது என்றும் அவர் கூறினார். 

அனைவரும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இந்த நடவடிக்கையை வரவேற்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும், அவர்களுக்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஜெய்ராம் தாக்கூர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஒரே மாதிரியான சிவில் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »