Press "Enter" to skip to content

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்க ஒரு தேர்வு மையத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 முதல் 4 பேர் வரை நிரந்தரமாக கண்காணிக்க 250 நிரந்தர உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவார்கள்.

இது தவிர தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர்.

தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டன.

முதலாம் நாளான இன்று தமிழ் பரீட்சை நடந்தது. மாணவ-மாணவிகள் 9.30 மணிக்கே தேர்வு கூடங்களுக்கு வந்தனர். தேர்வை பதட்டம் இல்லா–மல், மகிழ்ச்சியாக எழுத வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கியதின் பேரில் உற்சாகமாக தேர்வு எழுதினார்கள்.

9.45 மணிக்குள் தேர்வு கூடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே வந்து அமர்ந்தனர். ஒரு பெஞ்சிற்கு 2 பேர் வீதம் இடைவெளி விட்டு வழக்கமான நடைமுறையில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் சாதாரணமாக அமர்ந்து தேர்வு எழுதினர்.

10 மணிக்கு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முழுமையாக நடைபெறுகிறது.

ஆள்மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன.

வினாத்தாள்கள் காப்பு மையங்களில் இருந்து பாதுகாப்பாக பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக கசிந்து விடக்கூடாது என்பதில் கல்வித்துறை மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

சென்னை மாவட்டத்தில் 47 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். 16 வினாத்தாள் காப்பு மையங்களில் இருந்து தேர்வு கூடங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,346 மாணவ-மாணவிகள் 91 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் 5 மையங்களில் தேர்வு எழுதினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். 165 பறக்கும் படை அலுவலர்கள் உள்பட 425 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 133 தேர்வு மையங்களில் 23,043 மாணவர்களும் 20,606 மாணவிகளும் என மொத்தம் 43,649 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

தனித்தேர்வர்களுக்கு 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 193 சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது.

புழல் மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக சிறைச்சாலை வளாகத்திலேயே தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் ஒரு மையத்திற்கு 4 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் வீதம் 18 மையங்களுக்கு 72 கட்டு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்க ஒரு தேர்வு மையத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 முதல் 4 பேர் வரை நிரந்தரமாக கண்காணிக்க 250 நிரந்தர உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதன்மை கல்வி அலுவலரின் தலைமையில் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள 35 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (6ந்தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு 3,936 மையங்களில் நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »