Press "Enter" to skip to content

நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50 சதவீதம் சலுகை- மத்திய அரசு தகவல்

கோல் இந்தியா மற்றும் ஃபிக்கி அமைப்பு சார்பில் நிலக்கரி எரிவாயு தயாரித்தல் என்ற தலைப்பிலான  முதலீட்டாளர் கூட்டம் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 

நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

எரிசக்திதுறையில் இந்தியா தனித்து விளங்க உதவிசெய்யும் விதமாக, நிலக்கரியில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது போன்ற வாய்ப்புகளை ஆராயுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய நிலக்கரி நிறுவனம் மூடிய20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் துறைக்கு அளிக்கவும், அவற்றை மீண்டும் திறந்து வருவாய் பகிர்வு மாதிரியில் உற்பத்தியைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் சுமார் 380 மில்லியன் டன்  நிலக்கரி இருப்பதாகவும், இதிலிருந்து 30-40  மில்லியன் டன் நிலக்கரியை எளிதாக எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுரங்கப் பணிகளை தொடர்வது அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதை அதிகரிக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியின் இறக்குமதியை குறைப்பதும் இந்தத் துறையில் நாட்டில் தற்சார்பு நிலையை உருவாக்குவதும் நிலக்கரி அமைச்சகத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தொடர்வண்டித் துறை துறை  இணை மந்திரி ராவ் சாஹேப் பாட்டீல் தன்வே, நிலக்கரித்துறை செயலாளர் மருத்துவர் அனில்குமார் ஜெயின், இந்திய நிலக்கரி நிறுவன தலைவர் பிரமோத் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »