Press "Enter" to skip to content

இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்- அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 

மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. 

பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்தினருடன், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், அவர் கப்பல் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து திரிகோணமலை கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் என்று, அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலக மாட்டார் என்றும், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய பங்கு வகிப்பார் என்றும்  நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று, அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொருளாதார நிதி நெருக்கடியை சீர் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறிக்கை ஒன்றில் கோத்தபய குறிப்பிட்டுள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »