Press "Enter" to skip to content

இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர்- அதிபர் கோத்தபய ராஜபக்சே

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் பயங்கர கலவரம் வெடித்தது. அந்த கலவரம் இலங்கையில் தெற்கு பகுதி முழுவதும் பரவியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது பொதுமக்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள்.

ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடு முற்றிலுமாக தீவைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த ராஜபக்சேவின் தந்தை சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 40 தலைவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.

கலவரம் அதிகரித்ததால் உயிருக்கு பயந்து கொழும்பு அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் ஓட்டம் பிடித்தார். அவரை ராணுவ உலங்கூர்திகள் மீட்டதாக கூறப்படுகிறது. சீன ஓட்டலில் தங்கியிருந்த அவர், பிறகு திரிகோணமலைக்கு சென்று அங்குள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையே புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவர் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமைதி காக்க இலங்கை மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்- பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »