Press "Enter" to skip to content

1.20 லட்சம் பஸ் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்கிறது

1.9.2022ல் மீண்டும் ஒரு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தையை மேலும் இழுக்காமல் முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை:

அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படாமல் தள்ளிப்போனது. 2 வருடமாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊதிய உயர்வு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பஸ் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவ சலுகை வழங்குதல், ஓய்வூதிய நிலுவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார்.

போக்குவரத்து செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன், ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி மா.ராசு, சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சவுந்தர்ராஜன், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. விஷ்ணுபிரசாத உள்ளிட்ட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 4 மாதத்தில் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தமும் நிறைவு பெற்று 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும்.

அதாவது 1.9.2022ல் மீண்டும் ஒரு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தையை மேலும் இழுக்காமல் முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை பட்டியலில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காலி பணியிடங்களை நிரப்புதல், டிரைவர், கண்டக்டருக்கு அரசு ஊழியர் சம்பளம் நிர்ணயம் செய்தல், பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைககளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தின.

ஒருவேளை பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அடுத்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படலாம் என தெரிகிறது. இருப்பினும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள், தொழிற்நுட்ப பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்க முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் கூறியதாவது:

பஸ் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அட்டவணை வெளியிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் ஊதிய உயர்வு அட்டவணை ஒன்றிணைக்கப்பட்டன. அதனை 6 பிரிவாக தனித்தனியாக பிரிக்க வேண்டும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.504 கோடி பணப்பலன் உடனே வழங்க வேண்டும். சம்பள உயர்வு 25 சதவீதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். இதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா தொழிற் சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில், 31.8.2019ல் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்தது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பேச்சுவார்த்தை நடந்தது. தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள், பணப்பலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »