Press "Enter" to skip to content

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும்.

1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டி நடைபெற்றது.

21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26ந்தேதி முதல் அக்டோபர் 2ந்தேதி வரை நடக்கிறது. இது டென்னிஸ் ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அனுமதி பெற்று தந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய அமிர்தராஜியிடம் இன்று இதற்கான இசைவு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு துறையின் அதிகாரிகள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கான மைதானத்தை பராமரிப்பதில் தொடங்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

இந்தப் போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியால் அடுத்த ஆண்டு பீச் வாலிபால் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது.

டபிள்யு. டி.ஏ. சேலஞ்சர்ஸ் சீரியஸ் என்ற பெயரில் ஐதராபாத், பெங்களூர், புனே, மும்பையில் இந்த போட்டி நடந்துள்ளது.

தற்போது டபிள்யு. டி.ஏ.250 என்ற பெயரில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »