Press "Enter" to skip to content

ரேசனில் பொருள் கொடுத்தாலும், சிலிண்டர் விலை உயர்வால் எப்படி சமைப்பது?- மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை:

மும்பையில் நடைபெற்ற சிவசேனா கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கினார்.

பாஜகவை விட சிவசேனாவின் இந்துத்துவம் சிறந்தது என்றும், சில போலி இந்துத்துவவாதிகள் நம் நாட்டை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

எங்களது இந்துத்துவா குறித்து தீர்மானிக்க நீங்கள் யார்? காங்கிரசுடன் சென்றதால் எங்கள் இந்துத்துவா குறைந்து விட்டதா என கூறிய அவர், கோவில்களில் மணி அடிக்கும் இந்துக்கள் தேவையில்லை,பயங்கரவாதிகளை அடிக்கும் இந்துக்கள் எங்களுக்கு வேண்டும் என்று பால்தாக்கரே எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்றார்.

இந்துத்துவாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கள் நரம்புகளில் காவி ரத்தம் இருக்கிறது. எங்களுக்குச் சவால் விடாதீர்கள் என அவர் குறிப்பிட்டார். 

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் பாஜகவில் சேர முடிவு செய்தால்,  ஒரே இரவில் அவரைக் கூட அக்கட்சி புனிதராக மாற்றி விடும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடி ரேசனில் பொருட்கள் கொடுக்கிறார், ஆனால் அவற்றை பச்சையாக சாப்பிடுவோமா? சிலிண்டர் விலை கிடுகிடுவென உயரும் போது எப்படி சமைப்பது? என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

நாட்டின் நிலைமை மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், யாரை நம்பி வாக்களித்தோமோ அவர்கள் முதுகில் குத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பொய் வழக்குகளை பதிவு செய்து, எங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், தகுந்த பதில் அளிக்கப்படும், உங்களில் யாரும் தப்பிக்க மாட்டீர்கள் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »