Press "Enter" to skip to content

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது.

சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர்.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் ஊடகம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

ஐ.என்.எக்ஸ் ஊடகம் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற்றிருந்தது தொடர்பாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு முதலீட்டு வாரியம் இந்த நிதியை பெறுவதற்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில் அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், அவரது மகனான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2018-ம் ஆண்டும், ப.சிதம்பரம் 2019-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இந்த வழக்குகளில் பிணை பெற்று வெளியில் வந்தனர். வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று திடீரென சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை எதற்காக நடத்தப்படுகிறது? சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் புதிதாக சி.பி.ஐ. வழக்கு ஏதும் போட்டுள்ளார்களா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போடப்பட்டிருப்பது சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெரிய வந்தது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. மும்பையில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர். கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »