Press "Enter" to skip to content

ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. 

இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் காணொளி பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் காணொளி ஆய்வு பணிகளை நடத்தியது.

அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் குழு வழக்கு தொடர்ந்தது. 

இதை அடுத்து ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதிகள் விசாரணை நீதிபதியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தனர்.  

அதிக அனுபவம் உள்ளவர்கள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அதன் அடிப்படையில் வாரணாசி மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாக்கவும், இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தவும் மே 17 அன்று பிறப்பிக்கப்படட  இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »