Press "Enter" to skip to content

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் இருக்கும்போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு கோடை காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது.

இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 117.76 அடியை (மொத்த கொள்ளளவு 120 அடி) எட்டியது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இதனை தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24-ந்தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர் மீது மலர்கள் தூவி வரவேற்றார்.

அப்போது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை 250 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் சம்பா, தாளடி என முப்போக விளைச்சலுக்கும் பயன்படுத்தப்படும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி அன்று 18 ஆண்டுகளும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவே 10 ஆண்டுகளும், காலதாமதமாக 60 ஆண்டுகளும் தண்ணீர் திறந்துவிட ப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 600 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »