Press "Enter" to skip to content

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.

சென்னை:

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »