Press "Enter" to skip to content

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை:

மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதனையடுத்து கடைமடைப் பகுதி விவசாயத்திற்கும் தண்ணீர் சென்று சேரும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணி நிறைவுடையும் நிலையில் உள்ளது. 

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர் தேர் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். வேளாங்கண்ணியில் மு.க.ஸ்டாலின் இரவு தங்குகிறார். 

நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். 

பின்னர் அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் அவர், அம்மாப்பேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொள்கிறார். 

பின்னர் திருச்சி விமான நிலையத்தை சென்றடையும் முதலமைச்சர், அங்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். பின்னர் விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »