Press "Enter" to skip to content

ஓராண்டு ஆட்சியில் நடந்தது என்ன?- அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் மு.க.ஸ்டாலின்

வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள மாநாட்டு அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டை நாட்டின் அனைத்து துறைகளிலும் நம்பர்-1 முதன்மை மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் முக்கிய துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. தொலைநோக்கு சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் திட்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டை மிகச்சிறந்த தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச தொழில் கண்காட்சி மூலம் தமிழ்நாட்டுக்கு கணிசமான தொழில் முதலீடு கிடைத்து உள்ளது.

தற்போது ஜெர்மனி நாட்டில் நடந்து வரும் தொழில் மாநாடு மூலமாகவும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தனி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. 2021-2022-ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாக வெளிநாட்டு முதலீடு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அனைத்து துறைகளிலும் பணிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் சிறப்பு திட்ட துறை மூலம் 2 நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடியில் இருக்கும் மாநாட்டு அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் துறை சார்ந்த முதன்மை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், இணை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தமிழக அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறுவார்கள். இந்த கூட்டம் துறை வாரியாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அரசு துறை அதிகாரிகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிவார். கடந்த ஓராண்டு கால ஆட்சியில் சட்டசபையிலும் மற்றும் தேர்தல் அறிக்கை மூலமாகவும் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? எந்தெந்த திட்டங்கள் நிலுவையில் உள்ளன? என்பது பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வார்.

ஒவ்வொரு துறை சார்பாகவும் மிகவும் ஆழ்ந்த முறையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 1-ந்தேதி 19 துறைகளின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வார். ஜூன் 2-ந்தேதி 19 துறைகளின் செயல்பாடுகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிப்பார்.

ஜூன் 1-ந்தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், பொதுப்பணித்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம், வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம், தொழில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, கைத்தறித்துறை, வணிகவரித்துறை, பேரழிவு நிர்வாகத்துறை, சிறப்பு திட்டங்கள் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை, போக்குவரத்து, நிதித்துறை பற்றி ஆய்வு நடைபெறும்.

ஜூன் 2-ந்தேதி ஆதி திராவிடர் நலத்துறை, வேளாண், கால்நடை, பால்வளம், மீன்வளம், பிற்பட்டோர், இதர பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, தொழிலாளர் நலம், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூக நலம், முதல்வரின் முகவரி, மாற்றுத்திறனாளிகள் துறை, சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலம், திட்டம் மற்றும் நிதித்துறைகள் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

இந்த 2 நாள் ஆலோசனைக் கூட்டத்தின்போது கடந்த ஓராண்டு ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். எந்தெந்த துறைகளில் திட்டப்பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் தொய்வாக இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுக் கூட்டம் மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ள உள்ளார்.

ஆலோசனை முடிவில் என்னென்ன திட்டங்கள் எதற்காக நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாமல் இருக்கும் அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அந்த துறை சார்ந்த அமைச்சர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 1, 2-ந்தேதிகளில் நடைபெறும் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »