Press "Enter" to skip to content

காபோன் நாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

காபோன், செனகல் மற்றும் கத்தார் நாடுகளில் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

லிப்ரெவில்லி: 

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் வரும் 7 ந் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

முதல் கட்டமாக டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் கபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையத்திற்கு சென்று இறங்கிய வெங்கையா நாயுடுவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா அடாமோ ஆகியோர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். 

இந்த பயணத்தின் போது, காபோன் பிரதமர், அதிபர் உள்பட அந்நாட்டு தலைவர்களுடன் குடியரசு துணைத் தலைவர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

மேலும் காபோன் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் அவர், இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கிறார். 

2வது கட்டமாக ஜூன் 1 முதல் 3 வரை செனகல் நாட்டிற்கு செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டு அதிபர் மெக்கி சால் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், செனகல் தேசிய சட்டப்பேரவை சபாநாயகர் முஸ்தபா நியாசேவையும் சந்திக்கவுள்ளார்.

தமது பயணத்தின் நிறைவாக ஜூன் 4 முதல் 7-ந் தேதி வரை கத்தார் செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

பயணத்தின் நிறைவு நாளான்று, கத்தாரில் உள்ள இந்திய சமுதாயத்தினர் அளிக்கம் வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர் பங்கேற்கவுள்ளார். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி மருத்துவர் பாரதி பிரவீன் பவார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுஷில்குமார் மோடி, விஜய் பால் சிங் தோமர், பி ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் குடியரசு துணைத் தலைவருடன் மூன்று நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந்த மூன்று நாடுகளிலும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »