Press "Enter" to skip to content

“அந்த 10 நிமிடங்களை என்னால் நம்ப முடியவில்லை” – ஜேம்ஸ் கேம்ரூன் பாராட்டு குறித்து ராஜமவுலி சிலாகிப்பு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இருமுறை பார்த்து பாராட்டியதாக அப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவருடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ பட இயக்குநர் ராஜமவுலி, “‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்த ஜேம்ஸ் கேமரூனுக்கு படம் மிகவும் பிடித்து போனதால், அவர் தனது மனைவி சூசியிடம் படத்தைப்பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

பின்னர் மனைவியுடன் இணைந்து மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்திருக்கிறார். படம் குறித்து நீங்கள் உரையாடிய அந்த 10 நிமிடங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறேன். இருவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோபல் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »