Press "Enter" to skip to content

டாஸ்மாக் கடைகளில் ‘கள்’ – இயக்குநர் பேரரசு யோசனை

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம், ‘நெடுமி’. பிரதீப் செல்வராஜ், அபிநயா உட்பட பலர் நடித்துள்ளனர். நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இதன் பாடல்கள் மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில், இயக்குநர் பேரரசு பேசியதாவது: பனை மரத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. பனையில்தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சிதான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனை தானாக வளர்ந்து பலன் தரும். இதன் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள். இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு இல்லை. சிறிய போதை தரும், அவ்வளவுதான். உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. என்னைக் கேட்டால், டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் . உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த, கள் எவ்வளவோ மேல். கள்ளை, டாஸ்மாக்கில் விற்க வைத்து அதை நம்பி இருப்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். இவ்வாறு பேரரசு கூறினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »