Press "Enter" to skip to content

‘சாதி தான் என் அரசியல் எதிரி’ – கமல்ஹாசன் பேச்சு

தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரி சாதிதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய அவர், “உயிரே.. உறவே.. தமிழே.. இதுதான் வாழ்வின் உண்மை தத்துவம். நீங்கள் எத்தனை காலம் இயங்குகிறீர்களோ அத்தனை நூற்றாண்டு உங்களுக்கு ஆயுள். அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் நீடுடி வாழும்.

ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும். என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி. 21வயதாக இருக்கும்போதிலிருந்தே நான் இதனை சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது அதனை பலமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. அவ்வளவு தான். சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் தொடங்கி அனைவரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சிதான் நீலம் பண்பாட்டு மையம். ஸ்பெல்லிங் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். மய்யமும், நீலமும் ஒன்றுதான். அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் இருக்கின்றன” என தெரிவித்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »