Press "Enter" to skip to content

‘ஏலே’ பட அழகியல் முழுக்க திருடப்பட்டுள்ளது – ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ குறித்து இயக்குநர் ஹலீதா

கேரள திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ.மா.யூ’, ‘ஜல்லிக்கட்டு’ என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ‘சுருளி’ என்ற படத்தை வெறும் 19 நாட்களில் எடுத்து முடித்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை லிஜோ ஜோஸ் இயக்கினார். இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது. தொடர்ந்து சில தினங்கள் முன் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியானது.

இந்நிலையில் தமிழ் இயக்குநர் ஹலீதா ஷமீம், தனது ஏலே படத்தின் அழகியலை ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் திருடியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் சமூக வலைதள பக்கத்தில், ” ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.

ஆனால், நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் முழுவதும் இப்படம் முழுக்க திருடப்பட்டுள்ளது.

அங்கே ஐஸ்காரர் என்றால் இங்கே பால்க்காரர். அங்கே செம்புலி என்றால் இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே சின்ன (மினி) பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய ‘சித்திரை சேனன்’ நடிகர்-பாடகர், ஏலே-வில் நடித்த கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டியுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

இதில் படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இதுபோல், இரண்டு படத்தையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன.

எனக்காக நான் தான் பேச வேண்டும். தவிர்க்க முடியாமல், நானே பேச வேண்டிய சூழலில் இதைப் பதிவிடுகிறேன்.

நீங்கள் ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி திருடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »