Press "Enter" to skip to content

சிங்கிள் ஷங்கரும் திறன்பேசி சிம்ரனும் – விமர்சனம்

ஐஐடி பட்டதாரியான மாதேஷ் (ஷாரா), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்ணின் உணர்வுகளையும் சிந்தனையையும் கொண்ட திறன்பேசி ஒன்றைக் கண்டுபிடித்து சிம்ரன் (மேகா ஆகாஷ்)என பெயர் வைக்கிறார்.

மாதேஷிடமிருந்து திருடப்படும் ‘சிம்ரன்’, உணவு டெலிவரி ஊழியர் ஷங்கரிடம் (சிவா) சேர்கிறது. தன் செயற்கை நுண்ணறிவு மூலம் ஷங்கரின் ஆசைகளை நிறைவேற்றும் ‘சிம்ரன்’, அவரைக் காதலிக்கவும் தொடங்குகிறது. அதே நேரம் இன்ஸ்டா பிரபலம் துளசி (அஞ்சு குரியன்), ஷங்கரின் காதலைஏற்கிறாள்.

பெண் உணர்வுகள் இருந்தாலும்ஸ்மார்ட்கைபேசியை எப்படிக் காதலிப்பது என்று சிம்ரனின் காதலை நிராகரிக்கிறார் ஷங்கர். இதனால் ஷங்கரை, துளசியிடமிருந்து பிரிக்க, பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது ‘சிம்ரன்’. அவற்றை ஷங்கர் எப்படிசமாளிக்கிறார்? இறுதியில் அவர் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது படத்தின் மீதிக் கதை.

தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட திறன்பேசிகளுக்கு பெண்ணின் உணர்வைக் கொடுத்தால் என்ன ஆகும் என்கிறகற்பனையை, கலகலப்பான திரைப்படமாகக்கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா.செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட ‘இயந்திர மனிதன்’ ஒரு நிஜப் பெண்ணைக் காதலித்தால் என்ன ஆகும் என்ற ‘எந்திரன்’ கதையின் உல்டா போலத் தெரிந்தாலும், கதை களம் முற்றிலும் இங்கே மாறானது.

தனக்குப் பெண் துணை இல்லை என்பதற்காக ‘சிம்ர’னைப் படைக்கும் மாதேஷை,‘சிம்ரன்’ தந்தையாகக் கருதுவதால் காதலிக்க மறுப்பது, வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்துக்கு உணவுகளைக் கொண்டு சேர்க்கும் ‘ஃபுட் டெலிவரி’ ஊழியரான நாயகனின் அன்றாட வாழ்க்கைப்பாடுகள், மனைவியை இழந்துவிட்ட நாயகனின் தந்தையும் (மனோ) நாயகனைப் போலவே சிங்கிளாக இருப்பது, ‘சிம்ரன்’ நுழைவால் நாயகனின் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் என முதல் பாதி கலகலப்பாக நகர்ந்துவிடுகிறது.

இரண்டாம் பாதியில் ‘சிம்ரன்’, நாயகனுக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகள், தொடக்கத்தில் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தாலும் போகப்போக அலுப்பூட்டத் தொடங்குகின்றன. முதல் பாதியில் இருந்த நகைச்சுவையும் கலகலப்பும் இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகின்றன. பல குழப்பங்களுக்கும் பிறகு அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடும் இறுதிக் காட்சியை இன்னும் கலகலப்பாக்கி இருக்கலாம். இறுதியில் தன்னிலை உணர்ந்து ‘சிம்ரன்’ பேசும் வசனங்கள் மனதைத் தொடுகின்றன.

கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருப்பதோடு தனது ட்ரேட்மார்க் நகைச்சுவை வசனங்களால் ரசிக்க வைக்கிறார் சிவா. இயந்திரத்தின் பெண் வடிவமாக மேகா ஆகாஷ், க்யூட்டான பாவனைகளை வெளிப்படுத்திஇருப்பதோடு சோகத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளிலும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார். நாயகனின் காதலியாக அஞ்சு குரியனும் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பைத் தந்திருக்கிறார்.தனக்கும் வாழ்க்கைத் துணைத் தேடும்‘சிங்கிள்’ தந்தையாக மனோவும் நகைச்சுவைக்குப் பங்களித்திருக்கிறார்.

ஷாரா, பகவதி பெருமாள், நாயகனின் நண்பன் மா கா பா ஆனந்த், அவர் மனைவிதிவ்யா கணேஷ் என துணைக் கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவும் படத்தின் தேவைகளை நிறைவேற்றியிருக்கின்றன.

முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதிகலகலப்பூட்டவில்லை என்றாலும் இந்த சிங்கிள் ஷங்கரும் திறன்பேசி சிம்ரனும் பொழுதுபோக்கு விரும்பிகளை ஏமாற்ற மாட்டார்கள்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »