Press "Enter" to skip to content

“ஜிம்முக்கு செல்வது பலன் தந்தது” – மாரடைப்பில் இருந்து மீண்டது குறித்து சுஷ்மிதா சென்

“ஆக்டிவான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள்; ஜிம்முக்கு செல்லுங்கள்” என மாரடைப்பிலிருந்து மீண்டது குறித்து நடிகை சுஷ்மிதா சென் அனுபவம் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், “நான் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் அவதிப்பட்டேன். ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, எனது இருதயநோய் நிபுணர் எனக்கு பெரிய மனசு என்றார். சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பதிவு என் நலம் விரும்பிகளுக்கானது. நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இதைப் பதிவிடுகிறேன். என்னுடைய மறுபிறவிக்கு தயாராக இருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ் காணொளி ஒன்றில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “நிறைய இளம் வயதினரையும் கூட மாரடைப்பு விட்டுவைப்பதில்லை. எனவே, நீங்கள் அடிக்கடி இதய பரிசோதனை மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. என்னுடைய ரத்தக்குழாயில் 95% அடைப்பு இருந்தது. நான் மீண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நான் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறேன்.

எனக்குத் தெரியும் உங்களில் பலரும் ஜிம்முக்கு செல்வதை நிறுத்திவிட்டு, ‘இது பயன்தராது’ என ஒதுங்கியிருப்பீர்கள். ஆனால், உண்மையில் அதுதான் எனக்கு பயனளித்தது. அது ஒருகட்டம். நான் அதைக் கடந்து வந்துவிட்டேன். நான் பெரும் அதிர்ஷ்டசாலி. மாரடைப்பு வெறும் ஆண்களுக்கு மட்டும் வரக்கூடியது என பெண்கள் நினைத்துவிடக் கூடாது. அது பெண்களையும் பாதிக்கும். பயப்பட ஒன்றுமில்லை, ஆனால், விழிப்புடன் இருப்பது முக்கியம்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »