Press "Enter" to skip to content

அயோத்தி: திரை விமர்சனம்

அயோத்தியைச் சேர்ந்த பல்ராம் (யஷ்பால் சர்மா), மனைவி ஜானகி (அஞ்சு அஸ்ரானி), மகள்ஷிவானி (பிரீத்தி அஸ்ரானி), மகன் சோனு(அத்வைத்) ஆகியோருடன் புனித யாத்திரைக்காக, ராமேஸ்வரம் வருகிறார். மதுரையிலிருந்து டாக்ஸியில் செல்கிறார்கள். பல்ராமின் அவசரத்தால் மோசமான விபத்து ஏற்படுகிறது. படுகாயமடையும் ஜானகி உயிரிழந்துவிட, டாக்ஸி ஓட்டுநரின்நண்பர்களான அப்துல் மாலிக், பாண்டி(சசிகுமார், புகழ்) இருவரும் மொழி தெரியாமல் தவிக்கும் அந்தக் குடும்பத்துக்குஉதவ வருகிறார்கள். மனிதாபிமானத்துடன் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் மனதைப் பிழியும் மீதிக் கதை.

அயோத்தியில் வசிக்கும் இந்திக் குடும்பத்தையும் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலும் மதுரையிலும் வசிக்கும் தமிழர்களையும் இணைத்து மனிதத்தின் மீதும் மனித நேயத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கையை விதைக்கும் எழுத்தாளரின் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தன் முதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி. துளியும் பிரச்சார நெடியின்றி இயல்பாக உணர்த்தியிருக்கும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மனித உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அரசு விதிமுறைகளுக்கும் அவற்றைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சாமானிய மனிதர்களின் திண்டாட்டத்தையும் மொழி தெரியாத ஊரில் இப்படி ஒரு கொடுந்துயரம் நேரும்போது ஏற்படும் அவஸ்தையையும் படம் பார்க்கும் அனைவருக்கும் கடத்திவிடுவதுதான் இந்தத் திரைக்கதையின் ஆழமான வெற்றி.

ஒரே நாளில் நடப்பது போன்ற பெரும்பகுதித் திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்தாலும் சில இடங்களில் தேவைக் கதிகமான மெலோ ட்ராமா, இறந்துபோன பெண்தொடர்பான காட்சிகள் மீண்டும் மீண்டும்காட்டப்படுவது, காவல் நிலையக் காட்சியில் திரைக்கதைக்கு இடைச்செருகலாக வரும் பாடல் ஆகிய குறைகள் துருத்தித் தெரிகின்றன.

முன்பின் தெரியாதவர்களுக்கு உதவ எதற்கும் துணியும் நாயகன் சசிகுமார், அவர் நண்பராக புகழ் , இருவரும் கதாபாத்திரத்தின் தேவையைக் கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். மனைவி, குழந்தைகள் மீது துளிக்கூட அன்போ அக்கறையோ இல்லாத ஆணாதிக்கச் சிந்தனையும் மதப்பற்றும் மிக்க குடும்பத்தலைவராக யஷ்பால் சர்மா குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.

தாயின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும் தந்தையின் அடாவடிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெடித்தெழும் காட்சியிலும் சிறப்பானநடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரீத்தி அஸ்ரானி. அவர் தம்பியாக வரும் அத்வைத்தின் பரிதாப முகம் மனதிலிருந்து அகல மறுக்கிறது.

விமான அனுமதிச்சீட்டு கட்டணத்துக்காக,தான் ஆசையாக வாங்கியஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை விற்கும் நண்பனாக கல்லூரிவினோத், மகளின் தலைதீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு இடையே சவப்பெட்டி செய்து கொண்டுவந்து கொடுத்துச் செல்லும் பாவனை வெங்கட், சடலத்தின் பிணக் கூராய்வுக்காகக்குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் காவலர், அரசுமருத்துவமனை டீன், மருத்துவ நடை முறைகளை முடித்துக்கொடுக்கும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், கடைசிநேரத்தில் விமான அனுமதிச்சீட்டு கிடைப்பதற்காக, விதிகளை வளைக்க முயலும் அதிகாரி சேத்தன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் முத்திரைப் பதிக்கின்றன.

ரகுநந்தன் இசையில் உணர்வுபூர்வமான காட்சிகளில் ஒலிக்கும் பாடலின்இசையும் வரிகளும் மனதை உருக்குகின்றன. பின்னணி இசைக் கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் மனிதத்தை உயர்த்திப்பிடித்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியிருக்கும் ‘அயோத்தி’ அனைவரும் ஆரத் தழுவி வரவேற்க வேண்டிய படைப்பு.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »