Press "Enter" to skip to content

”எனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்”: குஷ்பு

மும்பை: சிறுவயதில் தனது தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற குஷ்பு, சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து குஷ்பு பேசும்போது, “ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு குழந்தை தனது இளம் வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அந்த காயம் தொடரும்.

எனது அம்மா மோசமான திருமண வாழ்வை சந்தித்தவர். என் தந்தை மனைவியை அடிப்பதும் குழந்தையை அடிப்பதும் தனது பிறப்புரிமை என்றே நினைத்திருந்தார். அவர் தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் அந்த பாலியல் துன்புறுத்தலை அனுபவிக்கும்போது எனக்கு வயது 8. எனது குடும்ப உறுப்பினர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்ததால் பல ஆண்டுகளாக வாயை மூடிக் கொண்டு இருந்தேன். ஒருகட்டத்தில் எனக்காக நான் நிற்க வேண்டிய தருணம் ஏற்பட்டது. எனக்கு நேர்ந்தது குறித்து நான் வெளிப்படையாகக் கூறியபோது எனக்கு 15 வயது.

என்ன செய்தாலும் அவர் தனது கணவர் என்பதாகவே என் அம்மா இருந்ததைக் கண்டதால் இந்த விவகாரத்தில் அவர் என்னை நம்புவாரா என்ற அச்சம் எனக்கு இருந்தது. எனினும் என் தந்தைக்கு எதிராக நான் தைரியமாகப் பேச ஆரம்பித்தேன். எனக்கு 16 வயது இருக்கும்போது அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார். அப்போது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்கு தெரியாது” என்று பேசினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »