Press "Enter" to skip to content

“வறுமையையும் தோல்வியையும் பார்த்திருக்கிறேன்” – நடிகர் விஷால் உருக்கம்

“நான் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். வறுமையை பார்த்துள்ளேன். நீங்கள் என் படத்திற்காக கொடுக்கும் காசை எடுத்துதான் உங்களைப் போன்ற என் தங்கைகளை படிக்க வைக்கிறேன்” என நடிகர் விஷால் உருக்கமாக பேசியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் மோஷன் விளம்பர ஒட்டி வெளியீட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், “மன தைரியத்தை வளர்த்துகொள்ளுங்கள். இந்தச் சமூகம் உங்களால் முடியாது என சொல்லும். ஆனால் முடித்து காட்டுங்கள். உங்களால் மட்டும் தான் முடியும். நான் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். வறுமையை பார்த்துள்ளேன். நீங்கள் என் படத்திற்காக கொடுக்கும் காசை எடுத்து தான் உங்களைப் போன்ற என் தங்கைகளை படிக்க வைக்கிறேன்.

மைசூருக்கு அண்மையில் சென்றபோது கல்லூரி ஒன்றில் 5 சீட் இலவசமாக எனக்கு கொடுத்தார்கள். ஒரு இருக்கையின் மதிப்பு 2.5 லட்சம் என நினைக்கிறேன். அதற்கு காரணம் நான் படிக்க வைக்கும் பெண்கள் ஸ்டேட் முதல் வந்து படிப்பில் சிறப்பாக முத்திரைப் பதிப்பதே. நான் படிக்கவைக்கும் என் தங்கை ஒருவர், என்னிடம், ‘பெரிய கல்லூரி ஒன்றில் பிஏ ஆங்கிலம் படிக்க ஆசை அண்ணா’ என்றார். நானும் பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டேன். இன்று அவர் செமஸ்டர் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளதாக செய்தி அனுப்பியுள்ளார். நெகிழ்ந்துவிட்டேன்.

ஆடி காரில் வரும் மாணவர்களுக்கு இடையே மீனவர் ஒருவரின் மகளான என் தங்கை முதலிடம் வந்தது எனக்கு பெருமை. உங்கள் முகத்திலிருக்கும் சந்தோஷம் தான் எனக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. நான் படிக்க வைக்கும் பெண்கள் வளர்ந்த பின் அவர்களும் மற்றவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் முன்னேறுவார்கள். அதற்கு நான் ஒரு தூணாக இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »