Press "Enter" to skip to content

“மனங்களை வென்ற படைப்பாளி” – நடிகர் சதீஷ் கவுசிக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சதீஷ் கவுசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “அவர் மனங்களை வென்ற படைப்பாற்றல் மிக்க மேதை” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி சதீஷ் கவுசிக்கிற்கான இரங்கல் குறிப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லோராலும் அறிப்பட்ட நடிகர் சதீஷ் கவுசிக் ஜியின் அகால மரணம் மிகவும் வேதனையைத் தருகிறது. தன்னுடைய சிறந்த நடிப்பு, இயக்கத்தால் மக்களின் மனங்களை வென்ற படைப்பாற்றல் மிக்க மேதை அவர். அவரது படைப்புகள் மக்களை தொடர்ந்து மகிழ்வித்துக்கொண்டே இருக்கும். இந்தத் துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தனது இரங்கல் குறிப்பில், “மிகவும் பெருமைக்குரிய நடிகரும், இயக்குநருமான சதீஷ் கவுசிக், நமது காலத்தின் சிறந்த சில படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். அவர் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளார். அவரது கலை அவரது திரைப்படங்கள் மூலமாக தொடர்ந்து வாழும். அவரது குடும்பத்தினர், நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சதீஷ் கவுசிக், டெல்லியில் மாரடைப்பு காரணமாக நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். மும்பையில் வசித்து வந்த சதீஷ் கவுசிக் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக டெல்லி வந்திருந்தார். அங்கு அவர் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்றிரவு அசவுகரியமாக இருப்பதாக தெரிவித்த சதீஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தேசிய நாடகம் மற்றும் திரைப்படம் தொலைக்காட்சி பள்ளியின் முன்னாள் மாணவரான சதீஷ் கவுசிக் ‘ஜானே பி தோ யாரோன்’, ‘மிஸ்டர் இந்தியா’, ‘தீவானா மஸ்தானா’, ‘உட்டா பஞ்சாப்’ முதலான படங்களில் தனது கதாபாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர். தனது நகைச்சுவைக்காக பெரிதும் அறியப்படும் சதீஷ், படங்களும் இயக்கியுள்ளார். சல்மான் கான் நடித்த “தேரே நாம்” கரீனா கபூர் கான், துஷ்ரா கபூர் நடித்த “முஜ்ஹே குச் ஹேக்னா ஹை” போன்றவை இவர் இயக்கிய பிரபலமான படங்களாகும்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »