Press "Enter" to skip to content

“என் பேச்சு துண்டிக்கப்பட்டதால் மனமுடைந்தேன்” – ஆஸ்கர் மேடை குறித்து குனீத் மோங்கா வேதனை

“ஆஸ்கர் மேடையில் இது இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது என பெருமையுடன் சொல்ல நினைத்தேன். ஆனால், மேடையில் என் பேச்சு துண்டிக்கப்பட்டதால் மனமுடைந்தேன்” என ஆஸ்கர் வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 95-வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரரஸ்’ (The Elephant Whisperers) ஆஸ்கர் விருது வென்றது. ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது மேடையில் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது என்றும், தன்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டது என்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டதால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

‘இந்திய தயாரிப்பில் உருவான இந்திய படத்திற்கு கிடைக்கும் முதல் ஆஸ்கர் விருது இது’ என பெருமையுடன் சொல்ல நினைத்தேன். ஆனால், என்னுடைய பேச்சு அரங்கில் கேட்கப்படவில்லை. இந்தியாவின் தருணங்கள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இணையத்தில் காணொளி, புகைப்படம் மூலமாக பலரும் என் பேச்சு துண்டிக்கப்பட்டத்தை வருத்தத்துடன் பதிவிட்டிருந்ததை கண்டேன். பின்னர் என்னை ஆறுதல்படுத்திக்கொண்டு, மீண்டும் ஒருநாள் இதே மேடை ஏறி நிச்சயம் பேசுவேன் என சொல்லிக்கொண்டேன்” என்றார்.

இது தொடர்பான காணொளியில் ஆஸ்கர் மேடையில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு பேசி முடித்ததும், மைக்கை நோக்கி பேச செல்கிறார் தயாரிப்பாளர் குனீத். ஆனால், அவர் பேச முனையும்போது அரங்கில் ஆர்ககெஸ்ட்ரா ஒலிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேடையிலிருந்து வழியனுப்பபடுகிறார்கள்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »